ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்
- ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக மனு.
- மக்களவை உறுப்பினர் பதவி செல்லாது என அறிவிக்கக்கோரி மனுத்தாக்கல்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளார். இதற்கான ஆவணங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் சில இ-மெயில்கள் தன்னிடம் உள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தி, இந்திய தேர்தல்களில் போட்டியிட தகுதியானவர் அல்ல. மக்களவை உறுப்பினர் பதவியை வகிக்க இயலாது என விக்னேஷ் ஷிஷிர் உத்தர பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து அந்நாட்டு அரசாங்களத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது "மனுதாரரின் புகாரைத் தீர்ப்பதற்கு மத்திய அரசால் எந்த கால அவகாசத்தையும் வழங்க முடியாது, இந்த மனுவை நிலுவையில் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை" என தெரிவித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், மனுதாரர் பிற மாற்று சட்ட தீர்வுகளை ஆராய்வதற்கு அனுமதி அளித்ததுள்ளது.