எம்புரான் படத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்
- எம்புரான் திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியானது.
- இப்படத்திற்கு தடைவிதிக்க கோரி பா.ஜ.க. நிர்வாகி விஜேஷ் கேரள ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.
திருவனந்தபுரம்:
மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் நடித்திருக்கும் படம் எல்2: எம்புரான். இந்தப் படம் மார்ச் 27-ம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதாக எதிர்ப்பு எழுந்தது.
இதற்கிடையே, இந்தப் படத்தில் இந்திய ராணுவம் குறித்தும் குஜராத் கலவரம் குறித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் நிர்வாகி வி.வி.விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விளம்பர நோக்கத்துடன் கொடுக்கப்படும் புகார் என கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், எம்புரான் படத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், எம்புரான் படத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த திருச்சூர் மாவட்ட நிர்வாகி விஜேஷ் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.