இந்தியா

தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்ட கார்கே... பதிலடி கொடுத்த பாஜக

Published On 2023-04-27 12:57 GMT   |   Update On 2023-04-27 12:57 GMT
  • காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது என பாஜக தலைவர் தெரிவித்தார்.
  • பாஜகவின் சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்று கார்கே கூறினார்.

கடாக்:

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஆளுங்கட்சியான பாஜகவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுக்கின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இது பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

கார்கே பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

'காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடியை 'விஷப் பாம்பு' என்று அழைக்கிறார். இப்படி பேசியது எப்படி முடிந்தது என்பது நமக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது. இந்த விரக்தியானது, கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி அடைவதை காட்டுகிறது' என அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பாஜக பாம்பு போன்றது என்றும், அந்த கட்சியின் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் தெரிவித்தார். அந்த சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்றும் அவர் கூறினார். நான் அவருக்கு (மோடி) எதிராக பேசவில்லை என்றும் கார்கே கூறினார்.

Tags:    

Similar News