பிரதமருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மிரட்டல்: பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் அமளி
- மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.
- காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் அமர்வு இன்று தொடங்கியது.
டெல்லியில் நேற்று வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அதோடு அவருக்கு அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.
இந்த விவகாரத்தை ஆளும் பா.ஜ.ஜக உறுப்பினர்கள் எழுப்பினார்கள். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.கா எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான பிரச்சினையை கிளப்பினார்கள்.
இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த அமளியால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினை கிளப்பியதால் 2 மணி வரை அைவ ஒத்தி வைக்கப்பட்டது.
இதே பிரச்சினையை மேல்சபையிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் கிளப்பினார்கள். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-
காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும், மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
காங்கிரஸ் அரசியல் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது. இது கற்பனை செய்ய முடியாதது.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா எம்.பி.க்களின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.