null
மேலாடையின்றி போராட்டம்: 4 காங்கிரஸ் தலைவர்கள் கைது- பாஜக-வினர் பதில் போராட்டம்
- ஏ.ஐ. மாநாட்டு பகுதியில் இளைஞர் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தினர்.
- 4 காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
டெல்லி ஏ.ஐ. மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. இன்றுடன் முடிவடைகிறது.
டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வரும் இந்த மாநாட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் இளைஞர் பிரிவு நடத்திய போராட்டத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
பாஜக எம்.பி. மனோஜ் திவாரி "இந்த செயலுக்காக நாட்டு மக்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள். 80-க்கும் மேற்பட்ட நாட்டினர் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முயற்சியை அவர்கள் பாராட்டியுள்ளனர்" என்றார்.
இதற்கிடையே போராட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.