இந்தியா

டிட்வா புயல் பாதிப்புக்கு நிதி உதவி - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

Published On 2026-02-21 08:41 IST   |   Update On 2026-02-21 08:41:00 IST
  • டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.
  • செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார்.

இந்தியா சார்பில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் நேரில் வந்து இதில் கலந்து கொண்டனர். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவும் பங்கேற்றார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அனு ரகுமார திசநாயகாவை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர் மோடியை அனுரகுமார திசநாயகா பாராட்டினார். இதுபோல இந்திய அரசின் பல்வேறு அணுகுமுறைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும், டிட்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். "எங்கள் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார, வர்த்தகம் மற்றும் கலாசார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். சமீபத்திய டிட்வா சூறாவளியின்போது இந்தியாவின் விதிவிலக்கான ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

இதுபோல பிரதமர் மோடியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவர் "எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாசாரம், நீலப்பொருளாதாரம் மற்றும் பலவற்றில் ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

டிட்வா புயல் பாதிப்புக்காக இலங்கைக்கு இந்தியா முதல் ஆளாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மறுசீரமைப்பு தொகுப்புக்காக உறுதி செய்தது. இதில் சாலைகள், ரெயில்வே மற்றும் பாலங்கள் மறுசீரமைப்பு, வீடுகள் மறுகட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளுக்கு ஆதரவாக இருந்தது.

Tags:    

Similar News