இந்தியா

மன அமைதியை தேடி... அரசு வங்கி வேலையை விட்ட பெண்!

Published On 2025-09-03 10:25 IST   |   Update On 2025-09-03 10:25:00 IST
  • இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.
  • பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது.

அரசு வேலை என்பது பலருக்கும் லட்சியமாக உள்ளது. அந்த லட்சியத்திற்காக பாடுபடுபவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள், தோல்வியும் அடைகிறார்கள். தோல்வி அடைந்தாலும் விடாது அரசு வேலைக்காக அரும்பாடுபடுகிறார்கள்.

இந்த நிலையில், அரசு வங்கி வேலைக்காக அயராது படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசு வங்கியில் வேலைபார்த்த 29-வயது இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது இணையதள வாசிகளிடையே பேசும்பொருளாகி உள்ளது.

டெல்லியை சேர்ந்த 29 வயதான வாணி என்பவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீரட் கிளையில் கடன்களை நிர்வகிக்கும் ஸ்கேல்-I அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் அரசு வேலை இவருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு பெரும் சுமையாகவே தெரிந்துள்ளது. இதனால் அவர் தனது வேலையை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் நான் மிகவும் எரிச்சலூட்டுபவளாகவும், எளிதில் கோபப்படுபவளாகவும் மாறிவிட்டேன். பணத்தை விட மன அமைதியைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். அதேநேரம் நான் இப்படிச் சொல்வதால் யாரும் வங்கிப் பணியில் சேர வேண்டாம் என நான் சொல்லவில்லை. எனது கதையை மட்டுமே நான் இங்கு பகிர்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் கலவையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதற்கு தைரியம் தேவை! எல்லோராலும் இதைச் செய்ய முடியாது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள், மகிழ்ச்சியாக இருங்கள் என்றும், மற்றொருவர், இப்போதெல்லாம், எல்லோரும் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட்டாக மாறுகிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு, என்னிடம் சில சேமிப்புகள் உள்ளன. மேலும் வேலையில் இருந்தபோது அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே நான் செலவிட்டேன். நான் எந்தக் கடனும் எடுக்கவில்லை, அதனால் எனக்கு EMI இல்லை. எனது மாதாந்திர செலவுகள் 5 ஆயிரத்திற்கும் குறைவு என வாணி பதில் அளித்துள்ளார். 



Tags:    

Similar News