இந்தியா

மகளின் திருமண கடனை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட தம்பதி

Published On 2025-11-09 14:45 IST   |   Update On 2025-11-09 14:45:00 IST
  • இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.
  • கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கோர பண்டாவை சேர்ந்தவர் பிரமைய்யா (வயது 51). இவரது மனைவி அஞ்சலி (48). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இளைய மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

இளையமகள் திருமணத்தின்போது தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி திருமணத்தை நடத்தினர்.

கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் தம்பதியினர் விழிப்பிதுங்கினர்.

அப்போது பிரமைய்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி தனது செல்போனில் உள்ள யூடியூபில் செயின் பறிப்பது எப்படி என்ற தொழில்நுட்பத்தை கணவன், மனைவி இருவரும் கற்றுக் கொண்டனர்.

பின்னர், ஐதராபாத் வந்த இருவரும் தனியாக செல்லும் வயதான பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர். பறிக்கப்பட்ட நகைகளை அஞ்சலி சித்தர் பள்ளியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து கடன் வாங்கினார். கடன் வாங்கிய பணத்தில் தங்களது கடன்களை அடைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சிக்கட் பள்ளி அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு லிப்டில் வந்தார். லிப்ட் அருகே மறைந்திருந்த பிரமைய்யா மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்தார். இதில் மூதாட்டியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மூதாட்டி சிக்கட் பள்ளி போலீசில் புகார் செய்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

நேற்று அசோக் நகரில் சுற்றி திரிந்த பிரமய்யாவையும் அவரது மனைவி அஞ்சலியையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் இளைய மகளின் திருமண கடன்களை அடைக்க யூடியூப் பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News