டெஸ்லா கார் தொழிற்சாலையை ஆந்திராவுக்கு பெற ஓசை இல்லாமல் காய் நகர்த்திய சந்திரபாபு நாயுடு
- இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
- அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக சமீபத்தில் இந்தியாவில் ஆட்கள் சேர்ப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.
அதில் வணிக செயல்பாட்டு ஆய்வாளர், வாடிக்கையாளர் சேவை பிரிவு உள்ளிட்ட 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரி இருக்கிறது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழில் தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்த போதிலும் எலான் மஸ்க் இந்தியாவில் தனது நிறுவன கார் தொழிற்சாலையை கொண்டு வருவதற்காக மிகவும் ஆர்வமாக உள்ளார்.
இந்த கார் தொழிற்சாலை மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் டெஸ்லா கார் தொழிற்சாலையை எப்படியும் தனது மாநிலத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சத்தம் இல்லாமல் காய் நகர்த்தி வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திரா மந்திரி நாரா லோகேஷ் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது அவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனஜோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் கார் தொழிற்சாலை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் ஆந்திரா அரசு செய்து தரும் என கூறியதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
இதையடுத்து ஆந்திர அரசு மீண்டும் டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மின்சார வாகன உற்பத்தியை தொடங்கும் வகையில் டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்க பல்வேறு சலுகைகள் மற்றும் நில வசதி கொடுக்க அம்மாநில பொருளாதார மேம்பாட்டு வாரியம் முன்வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் மின்சார வாகனங்கள் விற்பனை 60 சதவீதம் நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தென் மாநிலமான ஆந்திராவில் கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான முயற்சியை சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார்.
முதலில் கார் இறக்குமதியை அதிகரித்து படிப்படியாக கார் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தவும் டெஸ்லா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.