இந்தியா

அமித் ஷா ராஜினாமா கோரி தீர்மானம்: போர்க்களமாக மாறிய சண்டிகர் மாநகராட்சி

Published On 2024-12-24 15:45 IST   |   Update On 2024-12-24 16:01:00 IST
  • மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது.
  • அப்போது, அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சண்டிகர்:

மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின்போது அம்பேத்கர் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், சண்டிகர் மாநகராட்சியில் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

அப்போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர்.

ஜவகர்லால் நேரு ஆட்சியின்போது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரை காங்கிரஸ் சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக பா.ஜ.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இது காரசாரமான வாக்குவாதங்களுக்கு வழிவகுத்தது.

தொடர்ந்து கோஷமிட்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் நியமன கவுன்சிலர் அனில் மசிஹ்வை "வாக்கு திருடன்" எனக்கூறியதால் அடுத்து மோதல் தீவிரமடைந்தது.

அப்போது பேசிய மசிஹ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (நேஷனல் ஹெரால்டு வழக்கில்) ஜாமினில் வெளியே இருக்கிறார் என பதிலளித்தார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக இருந்த அனில் மசிஹ், தேர்தல்களை பா.ஜ.க.வுக்கு சாதகமாக மாற்றுவதற்காக 8 வாக்குச்சீட்டுகளை மாற்றியதாக கூறப்படுகிறது. அதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News