டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவிப்பு
- மத்திய அமைச்சரவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.
இந்த கார் வெடிவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். நள்ளிரவு வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இது நேற்று 13 ஆக உயர்ந்தது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் கார் வெடிவிபத்து குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்டது கொடூரமான பயங்கரவாத செயல் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மத்திய அமைச்சரவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தேச விரோத சக்திகள் கார் மூலமாக வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள்" என்று மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவி அளிக்க ரூ.25,000 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.