"ஈரானில் நல்ல சம்பளத்தில் வேலை" - நம்பி ஏமாற வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை
- அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
- அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுகிறது.
ஈரானில் வேலைவாய்ப்பு தருவதாக நடக்கும் மோசடிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வழங்குவதாக அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
இவர்களின் பேச்சுகளை நம்பி ஈரானுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்குள்ள குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.
பின்னர், அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.