விஜயிடம் நாளையும் தொடரும் சிபிஐ விசாரணை
- டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
- சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கிருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றது.
சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விசாரணை முடிந்து ஆதவ் அர்ஜூனாவுடன் விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார்.
மேலும், விஜயிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றிரவு டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி நாளையும் விஜய் சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார். சிபிஐ அதிகாரிகள் மேலும் சில கேள்விகளை கேட்பதற்காக நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.