சிறுவனை பிட்புல் நாயை விட்டு கடிக்க விட்டு ரசித்த தொழிலதிபர் கைதாகி ஜாமினில் விடுவிப்பு
- ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோகைல் ஹுசைன். வெளிநாட்டு வகையை சேர்ந்த 'பிட்புல்' வகை நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். மன்கர்த் அருகே காரில் தனது நாயுடன் சென்றபோது திடீரென பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் காரை நிறுத்திவிட்டு அருகே போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் தனது நாயுடன் ஏறி பயணம் செய்ய முடிவு செய்தார். அந்த ஆட்டோவில் பயணித்த சிறுவர்-சிறுமிகள் அனைவரும் ஆட்டோவில் நாய் ஏறுவதை பார்த்து உடனடியாக அதில் இருந்து வெளியேறினர். ஆனால் 11 வயது ஹம்சா என்ற சிறுவன் மட்டும் அந்த ஆட்டோவில் சிக்கி கொண்டான்.
இதனை தொடா்ந்து சோகைல் ஹுசைனின் நாய், ஆட்டோவில் ஏறி அந்த சிறுவனை நெருங்கியது. மேலும் கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை கடித்து குதற தொடங்கியது. தனது நாயை தடுக்காமல் சோகைல் கைகொட்டி சிரித்தார். ஒருகட்டத்தில் அலறி துடித்து ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து சிறுவன் ஓட்டம் பிடிக்க அந்த நாயும் விடாமல் துரத்தியது.
இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியானது. இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தொழிலதிபர் சோகைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சோகைலை கைது செய்தனர். கைதான சில மணி நேரங்களில் சோகைல் ஜாமினில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்ததில் சிறுவனின் கை, தாடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.