இந்தியா

அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதுதான் பாஜக அஜெண்டா: பிரகாஷ் ராஜ் விமர்சனம்

Published On 2024-03-11 10:10 GMT   |   Update On 2024-03-11 10:45 GMT
  • இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார்.
  • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும்.

மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக எம்.பியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக எம்.பி அனந்த் குமார் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், பாஜக அஜெண்டாவின் வெளிப்படையான ரகசியம். துரோகிகளின் உள் சூழ்ச்சிகள் என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News