20-ந்தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு: முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்
- புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.
- ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.
தோ்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக நிதீஷ் குமாா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. கூறியிருந்தது.
இந்த நிலையில் சட்டசபைத் தோ்தலில் தொடா்ந்து 2-வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் முதல்-மந்திரியாக நிதீஷ்குமாா் நீடிப்பாா் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று அறிவித்தனர்.
தோ்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.
பாட்னாவில் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இதையடுத்து ஒருமித்த சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக பீகார் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கவர்னரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் கொடுத்தார்.
அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.
பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும்.
நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிதிஷ்குமார் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். இதைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.