இந்தியா

மணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு

Published On 2024-03-09 14:21 GMT   |   Update On 2024-03-09 14:21 GMT
  • ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.
  • மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரால் ராணுவ அதிகாரி மீட்கப்பட்டார்.

இம்பால்:

மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் இனக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் பயங்கரவாதிகளை எளிதில் அடையாளம் காண மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கோன்சம் கேடா சிங் என்ற ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.

ஒடிசா மாநிலத்தில் தற்போது பணிபுரித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான மணிப்பூருக்கு வந்துள்ளார். இவரது கடத்தல் தொடர்பாக கோன்சமின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில், கொன்சம் கேடா சிங் நேற்று மாலை பத்திரமாக மீட்கப்பட்டார். மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவர் மீட்கப்பட்டார். கடத்தல் சம்பவம் குறித்து மணிப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் என யாரேனும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News