இந்தியா

டெல்லி காற்று மாசு - வாகனங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டெல்லி அரசு - இன்று முதல் அமல்

Published On 2025-12-18 10:27 IST   |   Update On 2025-12-18 10:27:00 IST
  • காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  • டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக இன்று முதல் BS-6 தரமற்ற இயந்திர வாகனங்கள் வியாழக்கிழமை முதல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.

இந்த முடிவு டெல்லியின் எல்லை நகரங்களான குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவிலிருந்து தினமும் பயணிக்கும் சுமார் 12 லட்சம் வாகனங்களை நேரடியாகப் பாதிக்கும்.

இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினரையும் 37 அமலாக்கக் குழுக்களையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

பெட்ரோல் பம்புகளில் PUC விதியைக் கண்காணிக்க போக்குவரத்து, நகராட்சி மற்றும் உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குளிர்காலத்தில் டெல்லியின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 25 சதவீதம் வரை பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து, அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத அலுவலகத்தில் ஊழியர்களுடன் பணிபுரிய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளிப்பார். 

Tags:    

Similar News