தெலுங்கானாவில் கோவில், பள்ளி அருகே இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
- மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
- அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்:
ஐதராபாத்தின் ரெட் ஹில்ஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் என்பவர் இறைச்சி மற்றும் அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கோரினார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்தப் பிரச்சனையில் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 மீட்டருக்குள் இறைச்சி மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் உணர்வுகள், அமைதி, தூய்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மனதில் கொண்டு வழிகாட்டுதல்களை வகுக்குமாறு நகராட்சி மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.
இறைச்சி விற்பனை மையங்களைத் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கான விதியைச் சேர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த செயல்முறையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.