ஆக்ரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 5 மருத்துவர்கள் பலி
- ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்கை பெற்று வருகிறார்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
உத்தரபிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிற்சி பெற்ற மருத்துவர்கள், லக்னோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலையில் மருத்துவர்கள் பயணம் செய்த ஸ்கோர்ப்பியோ கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதில் 5 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்கை பெற்று வருகிறார்.
பலியான 5 பேரும் மருத்துவர்கள் ஆவர். அவர்கள் அனிருத் வர்மா, சந்தோஷ் குமார் மவுரியா, ஜெய்வீர் சிங், அருண் குமார் மற்றும் நர்தேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.