2024ல் இந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் 2200 சம்பவங்கள் பதிவு- மத்திய அரசு
- இந்துக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.
- தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு எடுக்கும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு.
2024 ஆம் ஆண்டில், குறிப்பாக அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, இந்துக்களுக்கு எதிராக 2,200 வன்முறை சம்பவங்கள் நடந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
இதே காலகட்டத்தில் பாகிஸ்தானிலும் இதுபோன்ற 112 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் மக்களவையில் தரவுகளை சமர்ப்பித்தது. அதில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்தந்த அரசாங்கங்கள் தங்கள் நாடுகளில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு எடுக்கும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு" என்று வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் அவல நிலையை, சர்வதேச அரங்கில் இந்தியா தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.