செய்திகள்

அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2019-05-31 15:21 GMT   |   Update On 2019-05-31 15:21 GMT
ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் இறுதியாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நாடுமுழுவதும் 5 ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கக்கூடிய திட்டத்தை அரசு அறிவித்தது. இதன் மூலம் 12 கோடி சிறு,குறு விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டு 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

மூன்று தவணைகளாக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் என்ற முதல் தவணையை 3.11 கோடி சிறு, குறு விவசாயிகள் பெற்று பலனடைந்துள்ளனர்.  2.75 விவசாயிகள் இரண்டாவது தவணையையும் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், இந்த உதவித்தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கோரிக்கையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில், ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற புதிய அரசின் முதல் மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியானது.
Tags:    

Similar News