செய்திகள்

எனக்கு மரணமே வந்தாலும், மோடி குடும்பத்தை அவமதித்து பேசமாட்டேன் - ராகுல்காந்தி

Published On 2019-05-15 15:18 IST   |   Update On 2019-05-15 15:18:00 IST
மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் மோடியின் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
போபால்:

ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ராஜீவ்காந்தியை நம்பர்-1 ஊழல் பேர்வழியாக இருந்த நிலையில் தான் மரணத்தை சந்தித்தார் என்று கூறினார். மேலும் விராத் போர் கப்பலை ராஜீவ்காந்தி சுற்றுலாவுக்கு பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

இவ்வாறு மோடி ராகுல்காந்தி குடும்பத்தினரை விமர்சித்து வருவதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய முன்னோர்களின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறார்கள். அவர்கள் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது தவறான வி‌ஷயம் அல்ல என்று கூறினார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி எப்போதும் எங்கள் மீது வெறுப்புத்தன்மையுடன் பேசி வருகிறார். அவர் எனது தந்தை ராஜீவ்காந்தி, பாட்டி இந்திராகாந்தி, கொள்ளு தாத்தா நேரு என அனைவரையும் அவமதித்து பேசி வருகிறார்.



அதே நேரத்தில் நான் என் வாழ்நாளில் ஒருபோதும் மோடியின் தாயார், தந்தை அல்லது அவரது குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன். நான் மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் அவர்களை அவமதித்து பேசமாட்டேன்.

நான் பிரதமர் மோடியை அன்பால் வென்று காட்டுவேன். அவரை கட்டி அணைத்துக் கொள்வேன். நான் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாரதிய ஜனதாகாரன் அல்ல. நான் காங்கிரஸ்காரன். எனவே யாரையும் அவமதிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

யார் எங்களை வெறுத்தாலும் பதிலுக்கு நாங்கள் அவர்களுக்கு அன்பை திருப்பிக் கொடுப்போம்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். 
Tags:    

Similar News