"சிறை" சர்ச்சைக்குரிய படமல்ல.. கேள்வி கேட்கும் படம்..!- நடிகர் விக்ரம் பிரபு
சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவிடம் நேர்காணல் நடந்தது. இதில், விக்ரம் பிரபுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரது பதிலும்..
*சினிமாவில் 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளீர்கள். இந்த பயணத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது என்ன உணர்கிறீர்கள்?
உண்மையிலேயே ஒரு நல்ல உணர்வு. 13 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அது எப்படி போய்விட்டது என்றே தெரியவில்லை. இந்தப் பயணம் எனக்கு வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம்—எல்லாவற்றையும் காட்டியுள்ளது. அதைவிட முக்கியமாக, மனிதர்களை புரிந்துகொள்ளவும், வாழ்க்கையை புரிந்துகொள்ளவும் கற்றுக் கொடுத்துள்ளது.
*ஆரம்பத்தில் சினிமா குறித்து உங்கள் கனவுகள் என்ன?
ஆரம்பத்தில் எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் ஒரு கனவு இருந்தது. சினிமா என்றால் இது தான், இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை. ஆனால் களத்தில் இறங்கிய பிறகு தான் புரிந்தது, சினிமா என்பது கனவு மட்டும் அல்ல, அது ஒரு பெரிய அமைப்பு, ஒரு தொழில், ஒரு குழு வேலை.
*25-வது படம், மைல்ஸ்டோன்ஸ், இவைகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்?
எனக்கு எண்கள் முக்கியமல்ல. அந்த காலகட்டத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன மாற்றம் அடைந்தேன் என்பதே முக்கியம். Milestones என்பது ஒரு நினைவுக் குறிப்பு மட்டும்.
*சிறை படம் உங்களை ஈர்த்த காரணம்?
கதை தான். அது மிகவும் நேர்மையாக இருந்தது. போலீஸ் அமைப்பு, சமூகத்தின் பார்வை, மனித உணர்வுகள்—எல்லாம் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருந்தது.
*சிறை ஒரு controversial படம் தானா?
இது controversial படம் அல்ல. ஆனால் இது கேள்விகள் கேட்கும் படம். ஒவ்வொருவரும் இதில் இருந்து தங்களுக்கு ஏற்ற ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல முடியும்.
*போலீஸ் கதாபாத்திரத்துக்காக தயாரானது எப்படி?
அது ஒரு பெரிய அனுபவம். உடல் மாற்றம் மட்டுமல்ல, மனநிலையும் மாற வேண்டும். Body language, discipline, mentality—இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது வாழ்க்கையிலும் பயன்படும் பாடங்கள்.