செய்திகள்

ராகுல் காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் நடக்காது- பா.ஜனதா தலைவர் கருத்தால் சர்ச்சை

Published On 2019-05-11 05:35 GMT   |   Update On 2019-05-11 05:46 GMT
கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து விமர்சித்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜே.டி.எஸ். கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஜே.டி.எஸ். கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதல் மந்திரியாகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பா.ஜனதாவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் பா.ஜனதாவின் வகுப்பு வாரியான அரசியலுக்கு முடிவு கட்ட ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தியையும், சித்தராமையாவையும் கர்நாடக மாநில பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ள மாட்டார். அதே போல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல் மந்திரியாக ஆக மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News