ஆங்கில புத்தாண்டு- வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
- ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.
- புத்தாண்டையொட்டி பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளாக்காட்சியாக திகழ்ந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் "லூர்து நகர்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து, புனித ஆரோக்கிய மாதாவை பயபக்தியுடன் வழிபட்டு செல்வது வழக்கம்.
கிறிஸ்தவ ஆலயங்களில் "பசிலிக்கா" என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று இரவு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் 2025-ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்து வழியனுப்பும் வகையில், இரவு 10.45 மணி முதல் 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரையும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணிக்கு ஆயர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார். அப்போது பேராலய வளாகத்தில் வாணவேடிக்கைகள் நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளாக்காட்சியாக திகழ்ந்தது.
பின்னர் பேராலயம் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.