தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்- பழனி கோவிலில் சாமி தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு

Published On 2026-01-01 10:48 IST   |   Update On 2026-01-01 10:48:00 IST
  • பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
  • மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது.

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்காக இருக்கும். அதன்படி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அரையாண்டு விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனிக்கு வந்தனர். பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும் பழனி அடிவார பகுதியில் கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

கூட்டம் காரணமாக அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்லவும், தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் படிப்பாதை வழியாக வரவும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதோடு கூட்டம் அலைகடலென இருந்ததால் பக்தர்கள் பகுதி, பகுதியாக அனுப்பப்பட்டனர்.

மேலும் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மட்டுமின்றி திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவிலிலும் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு பழனியில் தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பஸ் நிலையம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. அதேபோல் பழனியில் தரிசனம் முடித்த பின்பு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்நிலையத்தில் குவிந்ததால் அங்கும் கூட்டம் இருந்தது.

Tags:    

Similar News