செய்திகள்

ஜம்முவில் துலிப் மலர் தோட்டத்தில் கண்காட்சி தொடங்கியது

Published On 2019-04-17 09:54 GMT   |   Update On 2019-04-17 10:19 GMT
ஜம்முவில் சன்சார் ஏரிக்கரையில் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள துலிப் மலர் தோட்டத்தில் கண்காட்சி தொடங்கியது. #TulipGarden #JammuTulipGarden
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் இந்திரா காந்தி துலிப் தோட்டம் என்ற பெயருடன் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் (அல்லிப் பூ) மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது.

இதேபோல், ஜம்முவில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தம்பூர் மாவட்டத்தின் சன்சார் ஏரிக்கரையில் ரம்மியமான இயற்கை சூழலில் மேலும் ஒரு மிகப்பெரிய துலிப் தோட்டம் அமைந்துள்ளது.

இந்த தோட்டத்தில் சிவப்பு, மஞ்சள் போன்றபல வண்ணங்களில் துலிப் மலர்கள் உள்ளன. இந்த தோட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வண்ணமயமான கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும்.

அவ்வகையில், இந்த ஆண்டின் கண்காட்சியை ஜம்மு சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் நேற்று திறந்து வைத்தனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதுவித நிறக்கலப்பு கொண்ட மலர் வகைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.



15 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

17-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பாரசீக நாட்டில் இருந்து துலிப் மலர்கள் ஐரோப்பா கண்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பல பகுதிகளில் மரபணு மாற்றம் செய்து துலிப் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

உலகின் மிகப்பெரிய துலிப் தோட்டம் நெதர்லாந்து நாட்டின் ஹாலந்து நகரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #TulipGarden #JammuTulipGarden 
Tags:    

Similar News