செய்திகள்

ராகுல் வருமானம் அதிகரித்ததற்கு கணக்கு சொல்ல வேண்டும்- பாரதிய ஜனதா வலியுறுத்தல்

Published On 2019-03-25 06:57 GMT   |   Update On 2019-03-25 06:57 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் அதிகரித்ததற்கு கணக்கு சொல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. #Congress #RahulGandhi #LSPolls #BJP
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2004 முதல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.

அவர் 2004-ல் போட்டியிடும் போது தனது வருமானம் ரூ.56 லட்சம் என்று கூறி இருந்தார். 2009 தேர்தலில் வருமானம் ரூ.2 கோடி என்றும், 2014 தேர்தலில் ரூ.9 கோடி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அதாவது 10 ஆண்டுகளில் அவரது வருமானம் ரூ.8½ கோடி அதிகரித்து உள்ளது.

இது சம்பந்தமாக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறியதாவது:-

ராகுல்காந்தி எம்.பி.ஆக இருப்பதால் அதற்கான சம்பளத்தை பெற்று வருகிறார். இது தவிர அவர் எந்த தொழிலும் செய்யவில்லை. ஆனால் அவரது வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக ஒவ்வொரு தேர்தல் வேட்பு மனுவிலும் குறிப்பிட்டு உள்ளார்.

அவருக்கு வருமானம் எந்த வகையில் வந்தது. எப்படி இவ்வளவு தொகை அதிகரித்தது என்பதற்கு கணக்கு சொல்ல வேண்டும்.

ராகுலும், பிரியங்கா காந்தியும் 4.69 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை 6 மாதம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றுக்கு அந்த பண்ணை வீடு சொந்தமானது.

அந்த நிறுவனம் மீது வழக்கு விசாரணை இருந்து வருகிறது. ராகுல்காந்திக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. குத்தகைக்கு விட்ட பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசில் அந்த நிறுவனம் மீதான விசாரணை தொடரப்படவில்லை.

2-ஜி செல்போன் தொடர்புடைய யுனிடெக் நிறுவன சொத்தை ராகுல்காந்தி குடும்பத்தினர் வாங்கி உள்ளனர். இதிலும் ஏதோ தவறு நடந்து இருக்கிறது.

ராகுல்-சோனியாவுக்கு ரூ.100 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #RahulGandhi #LSPolls #BJP
Tags:    

Similar News