ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட சவுதி அரேபியா
- ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் தனது வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் இணைந்து சவுதி அரேபியா ஒரு அமைதியான முன்னெடுப்பை முன்னெடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்தால் அது தனது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று சவுதி அரேபியா கருதுகிறது.
குறிப்பாக ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டால் தங்களது நாட்டில் உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்கும் என்று சவுதி அரபியா அஞ்சுகிறது என்று கூறப்படுகிறது.
ஈரானிய ஆட்சியை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் எண்ணெய் சந்தைகளை சீர்குலைத்து , இறுதியில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே தீங்கு விளைவிக்கும் என்று சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.