ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்..!- இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
- அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்.
- தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடுங்கள் என டிரம்ப் கூறிய நிலையில் அறிவுறுத்தல்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர் கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலிகமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் போராட்டம்-வன்முறையில் 646 பேர் பலியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடுங்கள் உதவி வந்து கொண்டே இருக்கிறது என டிரம்ப் கூறிய நிலையில் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்தும் முடங்கியுள்ளது.