செய்திகள்

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நானும் பிரதமர் வேட்பாளர்தான்- மாயாவதி அதிரடி

Published On 2019-03-21 10:05 GMT   |   Update On 2019-03-21 10:05 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நானும் பிரதமர் வேட்பாளர்தான் என்று மாயாவதி அறிவித்துள்ளார். #mayawati #parliamentelection

லக்னோ:

இந்தியாவில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் இங்கு 80 தொகுதிகள் உள்ளது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும், புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை.

பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாடி 37 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள அஜீத்சிங் கட்சிக்கு 3 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, சோனியாவுக்காக அமேதி, ரேபரலி தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்து இருந்தார். இதனால் அவரது கட்சி தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தான் பிரதமர் வேட்பாளர்தான் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதாவை வீழ்த்த நான் பிரசாரம் செய்ய இருப்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் எனக்கு பிரதமர் கனவு இருக்கிறது.

1995-ல் நான் உ.பி. முதல் மந்திரியாக முதல் முறையாக பதவியேற்றேன். அப்போது நான் எம்.எல்.ஏ. வாகவும், எம்.எல்.சி.யாகவும் இல்லை.

அதே சூழ்நிலைதான் தற்போதும் நிலவுகிறது. எம்.பி.யாக இல்லாத ஒருவர் மந்திரியாகவோ அல்லது பிரதமராகவோ தேர்வு செய்யப்பட்டால் அவர் 6 மாதங்களில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

நானும் உயர் பதவிக்கு (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்டால் உ.பி.யில் காலியாக இருக்கும் எந்த தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.

இதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதற்காக தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்.

இவ்வாறு மாயாவதி கூறினார். #mayawati #parliamentelection

Tags:    

Similar News