தமிழ்நாடு செய்திகள்

பாலாற்றில் மணல் குவாரியை திறந்தால் பா.ம.க. போராடும் - அன்புமணி

Published On 2026-01-13 12:13 IST   |   Update On 2026-01-13 12:13:00 IST
  • ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியை தி.மு.க. அரசு உடனடியாக மூட வேண்டும்.
  • மீதமுள்ள மணல் குவாரிகளையும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் சக்கரமல்லூர் கிராமத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாலாற்றில் மணல் குவாரி திறக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலாற்றில் ஏற்கனவே நடைபெற்ற மணல் கொள்ளைகளால் நிலத்தடி நீர் மாசுபாடும், உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கொள்ளையடிக்கும் நோக்கு டன் மணல் குவாரிகளை திறப்பது கண்டிக்கத்தக்கது.

தேர்தல் வரை மணல் குவாரிகளை திறப்பதில்லை என்று கடந்த ஜனவரி 9-ந்தேதி முடிவெடுத்திருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே புதிய மணல் குவாரியை திறக்க ஆட்சியாளர்கள் அனுமதி அளிக்கிறார்கள் என்றால், ஆட்சிக்காலத்தின் கடைசி நிமிடம் வரை இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, கோடிகளை குவிக்க வேண்டும் என்ற பேராசை தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியை தி.மு.க. அரசு உடனடியாக மூட வேண்டும். மீதமுள்ள மணல் குவாரிகளையும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும். அதையும் மீறி மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைத் திரட்டி வரலாறு காணாத போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News