துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை திருப்பூர் வருகை- மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
- மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் அவர், நாளை மாலை காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
அதன்பின்னர் மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, கோவை கொடிசியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அன்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
துணை ஜனாதிபதி திருப்பூர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரடி மேற்பார்வையில் இரண்டு துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகப்படும்படியாக தங்கி உள்ளார்களா? என விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே துணை ஜனாதிபதி தங்கியிருக்கும் இடம், நிகழ்ச்சி நடைபெறும் இடம், அவர் செல்லும் வழித்தடம் ஆகியவற்றில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.