மகரவிளக்கு பூஜை - சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
- ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
- மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தபடி உள்ளனர். மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் தொடக்கத்தில் இருந்தே பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் சபரிமலையில் நாளை (14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
திருவாபரண ஊர்வலம் நேற்று இரவு ஆயரூர் புதியகாவு தேவி கோவிலில் தங்கியது. பின்னர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டது. திருவாபரணங்கள் அடங்கிய பெட்டியை அதற்காக விரதமிருந்த பக்தர்கள் தூக்கி வந்தனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பக்தர்கள் திரண்டு நின்று திருவாபரணத்தை வரவேற்று வழிபட்டனர்.
திருவாபரண ஊர்வலம் இன்று இரவு தேதிலாகா வனத்துறை சத்திரத்தில் தங்குகிறது. பின்பு நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு, மதியம் பம்பை கணபதி கோவிலிக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து புறப்பட்டு, சன்னிதானத்திற்கு மாலை 6 மணியளவில் திருவாபரணங்கள் வந்து சேரும்.
மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது.
அதன் தொடர்ச்சியாக மாலை 6:30 மணியளவில் திருவாபரணங்கள் சன்னிதானத்தை வந்தடைகிறது. அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மகரஜோதி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களாகவே சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஆங்காங்கே பல இடங்களில் குடில் அமைத்து தங்க தொடங்கினர். பெரியானை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விரிகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருக்கின்றனர்.
அது மட்டுமின்றி பம்பை மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் டெண்ட் அமைத்து தங்கி வருகின்றனர். இன்று வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி சரிதனத்துக்கு பின் ஆங்காங்கே தங்கியிருக்கின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுகின்றனர்.