செய்திகள்

கொல்லைப்புறம் வழியாக நுழைந்து புதுவை அரசை கைப்பற்றுவதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Published On 2019-02-17 10:16 GMT   |   Update On 2019-02-17 10:16 GMT
புதுவையில் கவர்னரை கண்டித்து ஐந்தாவது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த முக ஸ்டாலின் மத்திய அரசை தாக்கிப் பேசினார். #Narayanasamy #MKStalin
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறார் என முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி வந்தார்.

அவசரமாக செயல்படுத்த வேண்டிய 39 திட்டங்களை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கவர்னருக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி கடிதம் அனுப்பினார். ஆனால், இதன் மீது எந்த நடவடிக்கையும் கவர்னர் எடுக்கவில்லை.

இதையடுத்து கவர்னரை கண்டிக்கும் வகையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் குதித்தனர். இரவிலும் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள். அங்கேயே அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

முன்கூட்டியே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சில நிமிடங்கள் மட்டும் அங்கு இருந்து விட்டு உடனே தர்ணா போராட்டம் நடக்கும் இடத்துக்கு திரும்பி விடுகின்றனர்.

இன்று 5-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சி செய்த நாராயணசாமி குளித்து விட்டு வந்து மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டார். முன்னதாக, இன்று கிரண் பேடி புதுவை திரும்பும் நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாராயணசாமி தனது வீட்டில் இன்று காலை கருப்புக்கொடியை ஏற்றி வைத்தார்.

அதேபோல் மற்றவர்களும் தர்ணாவில் அமர்ந்து உள்ளனர். நாராயணசாமி மற்றும் அமைச்சர்களை காங்கிரஸ் மேலிட தலைவர் சஞ்சய்தத் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அகில இந்திய தலைவர்கள் பலரும் நாராயணசாமியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் புதுவை வந்தார். ஐந்தாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமிக்கு சால்வை அணிவித்து அவர் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தார்.



அப்போது பேசிய ஸ்டாலின், மோடி தலைமையிலான மத்திய அரசு கொல்லைப்புறம் வழியாக வந்து புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமியின் அரசை கவர்னர் கிரண் பேடி மூலம் கைப்பற்ற துடிப்பதாக குற்றம்சாட்டினார். தைரியம் இருந்தால் தேர்தலை சந்தித்து வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி அமைக்க முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற கொல்லைப்புற அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

ஆளுநர் கிரண்பேடி மக்களுக்கான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். பாஜகவுக்கு அடிப்பணிந்து அவர் செயல்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்.

டெல்லியில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய கவர்னர் கிரண் பேடி, புதுவை மாநிலத்தில் போலீஸ் மூலம் ஆட்சி நடத்த நினைக்கிறார். புதுச்சேரியை திகார் ஜெயிலாக மாற்றி இவர்களை எல்லாம் அடைத்து வைக்கலாம் என்று பார்க்கிறார்.

வாழ்விடமான காட்டைவிட்டு வந்த சின்னத்தம்பி யானை திருப்பூரில் கிராமங்களுக்குள் சுற்றித்திரிந்த செய்திகள் சமீபகாலமாக ஊடகங்களில் வந்தன. இப்போது அந்த யானை பிடிக்கப்பட்டு காட்டுக்குள் திரும்ப அனுப்பப்பட உள்ளது. இதேபோல், கிரண் பேடியையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனும் நாராயணசாமியின் இந்த போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். #Narayanasamy #MKStalin
Tags:    

Similar News