செய்திகள்

கொடநாடு விவகாரம்- சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Published On 2019-01-14 05:45 GMT   |   Update On 2019-01-14 05:45 GMT
கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #KodanadEstate #KodanadVideo #TrafficRamaswamy
புதுடெல்லி:

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளியாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்துபோனார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உச்ச நீதிமன்றதில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த வீடியோ உண்மை இல்லை என தெரிவித்தார். அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

இதையடுத்து அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில், மேத்யூ சாமுவேல், அந்த வீடியோவில் பேசிய மனோஜ், சயன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மனோஜ், சயன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேத்யூ சாமுவேலை போலீசார் தேடி வருகின்றனர். #KodanadEstate #KodanadVideo #TrafficRamaswamy
Tags:    

Similar News