செய்திகள்

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை தாயுள்ளத்துடன் ரத்து செய்ய வேண்டும் - தம்பிதுரை கோரிக்கை

Published On 2019-01-04 11:38 GMT   |   Update On 2019-01-04 12:35 GMT
பாராளுமன்ற மக்களவையில் இருந்து எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என தம்பிதுரை கேட்டு கொண்டார். #Thambidurai #revokedecision #AIADMK #TDP
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த இரண்டாம் தேதி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். 

இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகர் இருக்கையின் அருகே ஒன்றுகூடி அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

இதையடுத்து, அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடையும். எனவே இந்த எம்பிக்கள் அனைவரும் வரும் 8-ம் தேதியுடன் முடைவடியும் இந்த குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க இயலாத நிலை நீடிக்கின்றது.

இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். 

நீங்கள் ஏற்கனவே அவர்களை தண்டித்து விட்டீர்கள். இரண்டு நாட்களாக அவர்கள் அவைக்கு வரவில்லை. எனவே, தாயுள்ளத்துடன் இந்த உத்தரவை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மிகவும் கனத்த உள்ளத்துடன்தான் இந்த நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் செய்த அமளியை இந்த நாடும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக மற்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்கள் இடையூறு செய்தனர்.

இந்த அவையை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களை இடைநீக்கம் செய்ய நேர்ந்தது. இதுதொடர்பாக, நீங்கள் (தம்பிதுரை) எனது அறைக்கு வந்து பேசலாம். இதர கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி உங்கள் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார். #Thambidurai  #revokedecision #AIADMK #TDP 
Tags:    

Similar News