இந்தியா

'சிறையில் இருந்து வெளியே வந்ததுபோல் உணர்கிறேன்' - 20 ஆண்டுகளுக்கு பின் சிவசேனா பவன் சென்ற ராஜ் தாக்கரே!

Published On 2026-01-04 18:25 IST   |   Update On 2026-01-04 18:25:00 IST
  • மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • ராஜ் தாக்கரே 2006-ல் சிவ சேனாவிலிருந்து விலகி MNS கட்சியைத் தொடங்கினார்

மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தத் தேர்தலுக்கான "வசன் நாமா" (தேர்தல் அறிக்கை) வெளியீட்டு விழா இன்று மும்பையில் உள்ள சிவசேனா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ராஜ் தாக்கரே கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு சிவசேனா பவனுக்கு வருகைபுரிந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "இங்கு வருவது எப்படி இருக்கிறது என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சிறையில் இருந்து வெளியே வந்தது போல் உணர்கிறேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார். ராஜ் தாக்கரே 2006-ல் சிவ சேனாவிலிருந்து விலகி MNS கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு இன்றுதான் முதன்முறையாக சிவசேனா தலைமையகத்திற்கு வருகைதந்தார்.

பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News