மகாராஷ்டிராவில் மாரத்தான் ஓடிய 10-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்..!
- மாரத்தான் போட்டியில் 3-ம் இடம் பிடித்த நிலையில் மயங்கி விழுந்தார்.
- மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் வெல்ஜி என்ற இடத்தில் உள்ள பாரதி அகாடமி ஆங்கில பள்ளியில் விளையாட்டு தினம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
10-ம் வகுப்பு படித்த மாணவி ரோஷினி கோஸ்வாமி, மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். மாரத்தான் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 3-வது இடம் பிடித்தார். 3-வது இடம் பிடித்த ரோஷினியை பாராட்ட கூடியிருந்த அனைவரும் தயாராக இருந்தனர். அப்போது எல்லையை அடைந்ததும், அப்படியே மைதானத்தில் அமர்ந்து, மயங்கிய நிலைக்கு சென்றார். அருகில் இருந்த ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற 15 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள் உயிரிழந்தது குறித்து ரோஷினியின் தாயார் சுனிதா பென் கோஸ்வாமி கூறுகையில் "ரோஷினி இந்த நாள் நல்ல முறையில் தொடங்கினால். வழக்கமான நேரத்தில் எழுந்தார். சரியான உணவை உட்கொண்டார். டிபன் பாக்சில் மதிய உணவு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற என்னுடைய காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றாள். மதியம் அவர் இறந்து விட்டாள் என்ற இதயம் நொறுங்கும் செய்தியை பெற்றோம்" என கதறியபடி தெரிவித்தார்.