செய்திகள்

கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது: குமாரசாமி உத்தரவு

Published On 2018-10-26 02:15 GMT   |   Update On 2018-10-26 02:15 GMT
நிலக்கரி வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றும், அதனால் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்றும் மின்துறை அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumaraswamy
பெங்களூரு :

கர்நாடகத்தில் மின்சார பிரச்சினைகள் தொடர்பாக மின்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். மின்துறை அவர் வசமே உள்ளது. இந்த கூட்டத்தில் அந்த துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து குமாரசாமி அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. அடுத்து வரும் காலங்களிலும் கர்நாடகத்தில் மின்வெட்டை அமல்படுத்தக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி மத்திய அரசு, கர்நாடகத்திற்கு போதிய அளவு நிலக்கரியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மத்திய நிலக்கரித்துறை மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார்.



முடிந்தவரை நிலக்கரியை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நிலக்கரியை ஒதுக்கியவுடன், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் கர்நாடகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க ரெயில்வேத்துறை உதவ வேண்டும் என்று கேட்டுள்ளோம். கர்நாடக மின்சாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை அதிகாரிகளை சந்தித்து, நிலக்கரி விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

நிலக்கரி பற்றாக்குறையை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மேலும் சூரியசக்தி உற்பத்தி மற்றும் நீர்மின் உற்பத்தி மூலம் மின் பற்றாக்குறையை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.#kumaraswamy
Tags:    

Similar News