செய்திகள்

அரியானா கோவிலில் 2 பேர் கொலை

Published On 2018-08-20 10:52 IST   |   Update On 2018-08-20 10:52:00 IST
அரியானாவில் கோவிலுக்குள் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்:

அரியானா மாநிலம் கர்ணால் மாவட்டத்தில் மாங்கலார் என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ் பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பூசாரியாக வினோத் என்பவரும், அவருக்கு உதவியாக சுல்தான் என்பவரும் பணியாற்றி வந்தனர். மேலும், கர்ஜிந்தர், ரவீந்தர்சர்மா, அஜய்சர்மா ஆகியோர் ஊழியர்களாக இருந்தனர்.

அவர்கள் இரவில் கோவிலிலேயே தங்கிக் கொள்வது வழக்கம்.

சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த 5 பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கினார்கள். இதில் வினோத், சுல்தான் ஆகியோர் இறந்துவிட்டனர்.

மற்ற 3 பேருடைய நாக்குகளையும் துண்டித்தனர். பின்னர் கோவில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை குழந்தைகளும், ஒரு குடும்பத்தினரும் கோவிலுக்கு சென்றார்கள். அப்போது கோவில் வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டது.

இதுபற்றி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 2 பேர் இறந்து கிடப்பதும், 3 பேர் நாக்கு அறுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. 3 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. எனவே கொள்ளையர்கள் பணத்தை திருடிவிட்டு அவர்களையும் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நாக்கு துண்டிக்கப்பட்டதால் 3 பேராலும் பேச முடியவில்லை. மேலும் அவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருப்பதால் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமானதற்கு பிறகு தான் நடந்த சம்பவம் என்ன என்பது பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

Tags:    

Similar News