செய்திகள்

கவர்னர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 3-வது நாளாக தர்ணா போராட்டம்

Published On 2018-06-13 11:00 IST   |   Update On 2018-06-13 11:00:00 IST
டெல்லி மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த துணை நிலை ஆளுனர் ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி கவர்னர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 3-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். #AnilBaijal #CMArvindKejriwal
புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கெஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது டெல்லி அரசின் தலைமை செயலாளர் அனு பிரகாஷ் ஆம் ஆத்மி எம்.எல். ஏ.க்களால் தாக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலையில் துணை நிலை கவர்னர் பைஜாலை நேற்று முன்தினம் மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து 2 நாட்கள் இரவு கவர்னர் அலுவலகத்தில் உள்ள சோபாவில் அமர்ந்து தர்ணா செய்தார். இன்று 3-வது நாளாக கெஜ்ரிவாலின் தர்ணா நீடித்தது.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “எங்களது கோரிக்கை நிறைவேறினால் தான் இங்கிருந்து வெளியேறுவோம். இதை கவர்னரிடம் தெரிவித்து விட்டேன். இதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. டெல்லி மக்களுக்காகவே போராடுகிறோம்” என்றார்.

காரணமே இல்லாமல் கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக துணை நிலை கவர்னர் மாளிகை குற்றம் சாட்டி உள்ளது. கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #AnilBaijal #CMArvindKejriwal
Tags:    

Similar News