செய்திகள்

போலீசார் தாக்கியதில் வாலிபர் பார்வை பறிபோனது- 3 போலீசார் மீது கிரிமினல் வழக்கு

Published On 2018-06-08 07:11 GMT   |   Update On 2018-06-08 07:11 GMT
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆத்திரமடைந்த போலீசார் வாலிபரை சரமாரியாக தாக்கியதில் அவரின் பார்வை பறிபோனது. இது குறித்து 3 போலீசார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் ஆலுவாய் நகரம் குஞ்சாட்டுக்கரையை சேர்ந்தவர் உஸ்மான் (வயது 36). இவர் ஆலுவாய் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது முன்னால் சென்ற கார் மீது லேசாக மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் நிலைதடுமாறிய உஸ்மான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனையடுத்து காரில் இருந்து இறங்கி 3 பேர் உஸ்மானை சரமாரியாக தாக்கினர். முகத்தில் பலமாக தாக்கினர். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிவந்து தட்டிக்கேட்டனர். ஆனால் நாங்கள் எடத்தலா போலீஸ் அதிகாரிகள் என்று கூறினர்.

பின்னர் மீண்டும் உஸ்மானை தாக்கிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துக் சென்று அங்கேயும் பலமாக தாக்கினர். வாலிபரை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

வேறு வழியில்லாமல் உஸ்மானை போலீசார் விடுவித்தனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் சோதனை செய்தபோது உஸ்மானின் 2 பற்கள் உடைந்துபோனது. கண்ணுக்கு அடியில் இருந்த எலும்பு முறிந்துபோனது. தாடை எலும்பு முறிந்துபோனது. இது தவிர கண்ணுக்கு செல்லும் ரத்த குழாய் சேதம் ஏற்பட்டதால் 50 சதவீத பார்வை பறிபோனது தெரியவந்தது.

இது குறித்து முதல்-மந்திரி, மந்திரி மற்றும் டி.எஸ்.பி. ஆகியோருக்கு புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் மோசமான தாக்குதல் இதுவென்று கூறி உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதனையடுத்து ஆலுவாய் டி.எஸ்.பி. திருதுலசந்திரன் தாக்குதலில் ஈடுபட்ட ஏ.எஸ்.ஐ. புஷ்பராஜ் மற்றும் போலீஸ்காரர்கள் ஜலில், அப்சல் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து இடமாற்றம் செய்தார். பலத்த காயம் அடைந்த உஸ்மான் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் வந்தார்.

இந்நிலையில் தான் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தெரிவித்தார். #tamilnews
Tags:    

Similar News