செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் - ராகுல் கண்டனம்

Published On 2018-05-22 14:03 GMT   |   Update On 2018-05-22 14:03 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதை அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #Rahulgandhi
புதுடெல்லி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும், வேதனையும் வெளியிட்டுள்ளார்.


’ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற போலீசாரின் செயல் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு காட்டுமிராண்டித்தனமான உதாரணமாக அமைந்துள்ளது. இவர்கள் அநீதிக்கு எதிராக போராடியதற்காக இவர்கள் கொல்லப்பட்டனர். இறந்த தியாகிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குடுபத்தாருடன் எனது நினைவுகளும், பிரார்த்தனைகளும் இணைந்திருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #Sterliteprotest #policefiring #Rahulgandhi
Tags:    

Similar News