உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தொழிலாளர் தினத்தையொட்டி திருப்பூரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு - கமிஷனரிடம் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் பரபரப்பு புகார்

Published On 2023-04-26 04:49 GMT   |   Update On 2023-04-26 04:49 GMT
  • மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
  • கம்யூனிஸ்டு, தி.மு.க., தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆண்டுதோறும் மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தி.மு.க., கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தப்பட உள்ளது. கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் அரிசிக்கடை வீதியிலும், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் ராயபுரத்திலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அ.தி.மு.க. சார்பில் பெரிச்சிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் திருப்பூர் மாநகர போலீசில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டு, தி.மு.க. தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தெற்கு போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால் கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் அணி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து கமிஷனர், தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் கார்த்திக்கேயனை தொடர்பு கொண்டு அ..தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து விளக்கங்கள் கேட்டார். பின்னர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர். அனைத்து கட்சிகளின் மே தின பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில், அ.தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Tags:    

Similar News