தமிழ்நாடு செய்திகள்

அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை- நயினார் நாகேந்திரன்

Published On 2026-01-10 13:51 IST   |   Update On 2026-01-10 13:51:00 IST
  • தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார்.
  • எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

கோவை:

பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.-பா.ஜ.க. உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இன்று வழிபாடு நடத்தினோம். எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர். அ.தி.மு.க. கூட்டணியில் பங்கு வேண்டும் என்று பா.ஜ.க. இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை.

கூட்டணியில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதி செய்த பின் அறிவிப்போம். இரட்டை எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் செல்வார்கள்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவராக இ.பி.எஸ். இருக்கிறார். எங்கள் கூட்டணிக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டு இருக்கிறார்கள். முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி வந்துள்ளார். பொங்கல் பண்டிகை முடியட்டும். மேலும் பலர் வருவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்.

அமலாக்கத்துறை, வருமானத்துறையை பயன்படுத்துவது போல் சென்சார் போர்டையும் தற்போது மத்திய அரசு பயன்படுத்துவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அப்படியானால் பராசக்தி படம் ரீலிசாகியது முதலமைச்சருக்கு தெரியாதா? பராசக்தி படத்தை எப்படி சென்சார்டு போர்டு அனுமதித்தார்கள். பராசக்தி யாருடைய படம். படத்தில் அண்ணாவின் வசனங்கள் துண்டிக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. நான் படம் பார்க்கவில்லை.

தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஏற்கனவே சென்னைக்கு வந்து சென்றுள்ளார். முதன்முறையாக தமிழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். கொங்கு மண்டலத்தை மட்டும் பா.ஜ.க. குறிவைத்து பணியாற்றவில்லை. தமிழகம் முழுவதும் வெற்றி பெற உழைத்து வருகிறோம் என்றார். 

Tags:    

Similar News