சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
- டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது.
- அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் இரண்டு அடுக்கு (டபுள் டக்கர்) பஸ் சேவை கடந்த 1970 ஆண்டு முதல் இருந்து வந்தது. இந்த சேவை 2007 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சேவையை கொண்டு வர தமிழக அரசு ஆர்வம் காட்டியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வந்தன. அதன் முதல் கட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 20 பஸ்களை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி அமெரிக்க வாழ் தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கர் பஸ்ஸை அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து சுற்றுலாத்துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ந்தேதி தொடங்கி வைக்கிறார். அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை தொடங்க இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.