தமிழ்நாடு செய்திகள்

சட்டமன்ற தேர்தலுக்கு பிரேமலதா அதிரடி வியூகம் - கூட்டணி முடிவை அறிவிக்காததன் பின்னணி தகவல்கள்

Published On 2026-01-10 12:38 IST   |   Update On 2026-01-10 12:38:00 IST
  • பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
  • விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி உள்ளது. 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே அதிரடியாக களமிறங்கினார். அந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளை பெற்ற விஜயகாந்த் 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளை பெற்றார்.

இதனை அடுத்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிப்பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.

இதன் பிறகு நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக தே.மு.தி.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை வெற்றி பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வியூகம் வகுத்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவியை அளிப்பதாக அ.தி.மு.க. உறுதி அளித்து இருந்தது.

ஆனால் சமீபத்தில் மேல்சபை எம்.பி.க்கள் தேர்வான போது தே.மு.தி.க.வை அந்த கட்சி புறக்கணித்து இருந்தது. அ.தி.மு.க.வினர் இருவரை மேல்சபை எம்.பி.யாக்கி எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. அதுபற்றி கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியது. இதற்கடுத்து இந்த மாதம் மேல்சபை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தே.மு.தி.க. கூட்டணியை தக்க வைப்பதற்காகவே அ.தி.மு.க. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இதுபோன்ற சூழலில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரேமலதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரேமலதாவோ யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று மாநாட்டில் அறிவித்துவிட்டார்.

இது பிரேமலதாவின் தேர்தல் வியூகத்தை காட்டுவதாகவே அந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் ஏற்கனவே உள்ள கூட்டணியில் நீடிக்க போகிறது? என்பது இன்னும் முடிவாகாத நிலையில் நாங்கள் மட்டும் எதற்காக அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களது ஆதரவை பெற்றுவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். எனவே வருகிற தேர்தலில் அதற்கெல்லாம் இடம் கொடுக்காத அளவுக்கு முடிவெடுக்க வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் எண்ணமாக உள்ளது.

எனவே மேல்சபை எம்.பி. பதவியுடன் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கும் கட்சியோடு கூட்டணி அமைக்கலாம் என்பதே அந்த கட்சியினரின் விருப்பமாக உள்ளது. இதனையே தே.மு.தி.க. சார்பில் நிபந்தனையாக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை முறிக்க வேண்டாம் என்றும் பலர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் கட்சியுடன் கூட்டணிஅமைப்பதற்கு ஒரு சில மாவட்ட செயலாளர்களே வாக்களித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் கருத்தில் வைத்தே தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக காய் நகர்த்தி வருகிறது, இதற்கிடையே தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதையடுத்து விரைவில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. தலைமை பேச்சு நடத்தும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

தி.மு.க. தரப்பிலும் மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தே.மு.தி.க.- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதா இல்லை தி.மு.க. அணியில் இணைவதா என்கிற குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தை பிறந்த பிறகு கூட்டணி தொடர்பான அதிரடி அறிவிப்பை பிரேமலதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News