உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

முதியவரை கல்லால் தாக்கி நகை , பணம் பறிப்பு - கட்டிட தொழிலாளி கைது

Published On 2022-07-08 04:24 GMT   |   Update On 2022-07-08 04:24 GMT
  • வாலிபர் முதியவருக்கு போன் செய்து தனது உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் என கேட்டு உள்ளார்.
  • பொங்கலூர் லேஅவுட் வாய்க்கால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது வாலிபர் கல்லை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கினார்.

திருப்பூர் :

திருப்பூர் அடுத்த அவினாசிபாளையம் பெருந்தொழுவு பகுதியில் வசித்து வருபவர் கருப்பு (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிளீனர் மற்றும் தோட்டத்து வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று கருப்பு புதிய ஆடை வாங்குவதற்காக திருப்பூர் வந்துள்ளார். அப்போது பழைய பஸ் நிலையம் அருகில் வைத்து 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதியவரிடம் அறிமுகமாகியுள்ளார்.பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் போன் நம்பரை பரிமாறிக் கொண்டு நண்பர்கள் ஆகினர்.

இந்தநிலையில் அந்த வாலிபர் முதியவருக்கு போன் செய்து தனது உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் பெண் ஏதாவது இருக்கிறதா? என கேட்டு உள்ளார். அவரும் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும் பார்க்க செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபர் முதியவரை அழைத்துக் கொண்டு பெண்பார்க்க சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் பொங்கலூர் லேஅவுட் வாய்க்கால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் கல்லை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கினார். இதில் முதியவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இதனையடுத்து அந்த வாலிபர் கருப்புவிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கருப்புவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முதியவரை தாக்கி பணம் -நகையை பறித்தது தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (43) என்பதும் கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து செய்தனர்.

Tags:    

Similar News